Monday, April 9, 2018

உயர்கல்வித் துறை முறைகேடுகளைத் தடுக்க உயர்நிலைக் குழு: அண்ணா பல்கலை. முன்னாள் துணைவேந்தர் வலியுறுத்தல்

உயர்கல்வித் துறையில் முறைகேடுகளைத் தடுக்க அதிகபட்ச அதிகாரம் கொண்ட உயர்நிலைக் குழுவை அமைப்பது அவசியம் என அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் மு.அனந்தகிருஷ்ணன் வலியுறுத்தினார்.

தமிழ்நாடு பல்கலைக்கழக ஆசிரியர்கள் கூட்டமைப்பு, கல்லூரி பேராசிரியர்கள் கூட்டு நடவடிக்கைக் குழு ஆகியவை சார்பில் "உயர்கல்வி துறையில் ஊழல்' என்ற தலைப்பிலான கருத்தரங்கம் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதில் மு.அனந்தகிருஷ்ணன் பேசியது:
ஊழல்களே நடைபெறாத நாடுகளின் பட்டியலில் நியூசிலாந்து, பின்லாந்து, டென்மார்க், நார்வே ஆகிய நாடுகள் முன்னணியில் உள்ளன. இதில் இந்தியா 81 -ஆவது இடத்திலும், சீனா 77 -ஆவது இடத்திலும், ரஷியா 136 -ஆவது இடத்திலும் உள்ளன. ஆனால் ரஷியாவிலும், சீனாவிலும் கல்வி, விஞ்ஞானத் துறைகளில் ஊழலே இல்லை; இந்தியாவில் அனைத்துத் துறைகளிலும் ஊழல் உள்ளது. கல்வித் துறையில் முறைகேடுகள் காரணமாக, தரமற்ற ஆசிரியர்கள் ஒருமுறை பணியில் சேர்ந்தால் அவர்களால் ஒரு தலைமுறையைச் சேர்ந்த மாணவர்கள் பாதிக்கப்படுவர். எனவே, இதனை ஊழல் என்று மட்டும் கருதாமல் மாணவர்களின் எதிர்காலத்தைப் பாழாக்கும் நடவடிக்கை என்பதை மக்களும், அரசும் உணர வேண்டும்.
பணம் கொடுத்து துணைவேந்தர், பேராசிரியர் போன்ற பணிகளில் சேரும் ஆசிரியர்களை எப்படிக் கண்டறிவது, அவர்களை எவ்வாறு தகுதி நீக்கம் செய்வது, அவர்கள் மீது மேற்கொள்ளப்பட வேண்டிய சட்டப்பூர்வ நடவடிக்கை என்ன என்பவை குறித்து அரசு ஆலோசித்து, அதுதொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்ள அதிகபட்ச அதிகாரம் கொண்ட உயர்நிலைக் குழுவை நியமிக்க வேண்டும். அதில் மிகச்சிறந்த கல்வியாளர்கள், வல்லுநர்கள் இடம்பெற வேண்டும் என்றார் அவர்.
மார்க்சிஸ்ட் மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் பேசியது: கல்வி உலகமயமாக்கப்பட்ட வியாபாரமாகிவிட்டது. இந்தியா முழுவதும் கல்வி தனியார் வசம் உள்ளது. பொதுக்கல்வி முறை கைநழுவிப் போய்விட்டது. முன்பு தனியார் கல்வி நிறுவனங்கள் லாபநோக்கம் இல்லாமல் சமூகப் பார்வையுடன் இருந்தன. தற்போது அதில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டுவிட்டது. கல்வியை காப்பாற்ற வேண்டும் என்றால் பொதுக்கல்வி முறையை பலப்படுத்த வேண்டும். அரசு அதிகாரிகளில் 70 சதவீதம் முதல் 80 சதவீதம் வரை நேர்மையானவர்களாக உள்ளனர். ஆனால் சில காரணங்களால் அவர்கள் வெளியில்வர அச்சப்படுகின்றனர். நேர்மையான அதிகாரிகளுக்கு உரிய அங்கீகாரமும், பாதுகாப்பும் வழங்கப்பட வேண்டும் என்றார் அவர்.

No comments:

Post a Comment

உங்கள் மாவட்டத்தில் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் இந்த கல்வியாண்டில் (2018-19) எத்தனை இடங்கள் உள்ளன என்று தெரிந்து கொள்ள வேண்டுமா ?

உங்கள் மாவட்டத்தில் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் இந்த கல்வியாண்டில் (2018-19) எத்தனை இடங்கள் உள்ளன என்பதை காண கீழ்கண்ட Link ஐ Click செய்யவு...